சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம், போதை பவுடர் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம், போதை பவுடர் பறிமுதல்
x

மலேசியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1½ கோடி தங்கம், போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சாகுல் அமீது (வயது 37), இலங்கையை சேர்ந்த முகமது பரூக்கான் (30), முகமது இஸ்திகாம் (29) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

தங்கம் பறிமுதல்

அப்போது 3 பேரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.57 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 244 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். அதேபோல் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சையத் அலி (35) என்பவரிடமிருந்து ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 20 செல்போன்கள் இருந்தன. மேலும் அவரது உள்ளாடையில் இருந்த ரூ.49 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 60 கிராம் தங்கத்தையும், பக்ரைனில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை மண்ணடியை சேர்ந்த ஜலாலுல்லா சுல்தான் (25) என்பவரிடம் ரூ.15 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 237 கிராம் தங்கம் என ஒரே நாளில் ரூ.1 கோடியே 23 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 541 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கை வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பவுடர் பறிமுதல்

மேலும், ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டை சேர்ந்த அஸ்சுரா முஹம்மத் சபானி (வயது 49) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறிய அவர் அணிந்திருந்த காலணியில் விலையுர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் 'மேத்தோகுயிலோன்' ரக போதை பவுடரை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கடத்தி வந்த தான்சானியா நாட்டு பெண்ணை கைது செய்தனர்.


Next Story