விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.1 கோடி கொள்ளை


விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.1 கோடி கொள்ளை
x

தலைவாசல் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

தலைவாசல்:-

தலைவாசல் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

விவசாயி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாமியார் கிணறு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்கள்.

கடந்த 7-ந் தேதி இரவு கார்த்திகை மாதம் பவுர்ணமியையொட்டி அதே ஊரில் உள்ள புற்றுமாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பினர்். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தன.

ரூ.1 கோடி கொள்ளை

மேலும் பீரோக்களில் வைத்திருந்த ரூ.1 கோடியை காணவில்லை. இதனால் லோகநாதன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர்.

இது குறித்த தகவலின் பேரில் தலைவாசல் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனிப்படை

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்ெபக்டர் பாஸ்கர், ஆத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. மேலும் அங்கிருந்து சிறிது தூரத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அங்கு ஓட்டல்கள் உள்பட பல்வேறு கடைகள் காணப்படுகின்றன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் கொள்ளை நடந்த வீட்டுக்கு பின்புறம் ரெயில் தண்டவாளம் உள்ளது. மேலும் வீட்டை சுற்றி கரும்பு தோட்டம், மஞ்சள் தோட்டம் உள்பட தோட்டங்கள் உள்ளன. இதனால் கொள்ளையர்கள் வீட்டுக்கு பின்புறம் வந்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி வீட்டில் ரூ.1 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story