மீனவர்களுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்


மீனவர்களுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
x

ஓட்டப்பிடாரம் அருகே மீனவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே மீனவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

நலத்திட்ட உதவி

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். வேப்பலோடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் கென்னடி வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வேப்பலோடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் மூலம் மீனவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கு கிஸான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கடன் உதவி மற்றும் குளிரூரட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் வழங்கினார்.

தொடர்ந்து பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய வெளிப்பொருத்தும் எந்திரங்கள், இருசக்கர வாகனங்களில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்டு மீன் விற்பனை செய்யும் வாகனம் உள்ளிட்ட சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மீனவர்களுக்கு தனி வங்கி

தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தனி வங்கிகள் இருப்பது போல், மீனவர்களுக்கும் தனி வங்கி அமைக்க வேண்டும் என்ற வகையில் முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, தற்போது மீனவர்களுக்கான தனி வங்கி அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் 3 மாதங்களில் மீனவர்களுக்கான தனி வங்கி தமிழகம் முழுவதும் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், இணை இயக்குனர் அமல் சேவியர், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டிராஜன் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story