மளிகை கடையில் ரூ.1¾ லட்சம் பறிப்பு
கோவை அருகே மளிகை கடையில் புகையிலை பொருட்கள் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் போல் நடித்து சினிமா பாணியில் ரூ.1¾ லட்சத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை
கோவை அருகே மளிகை கடையில் புகையிலை பொருட்கள் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் போல் நடித்து சினிமா பாணியில் ரூ.1¾ லட்சத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மளிகை கடையில் சோதனை
கோவை அருகே குனியமுத்தூரை அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52). இவர் இடையர்பாளையம் சர்ச் தெருவில் 35 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பரத் (24). இவர் தந்தைக்கு உதவியாக கடையை பார்த்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்து இறங்கிய மர்ம நபர்கள் 3 பேர் தாங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று கூறியவாறு கடைக்குள் நுழைந்தனர். உங்கள் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக தகவல் வந்தது என்றும் கடையை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினர். அவர்களை அதிகாரிகள் என நம்பிய பரத் சோதனை செய்ய அனுமதித்தார்.
காரில் அழைத்து சென்றனர்
பின்னர் கடையில் இருந்து சில புகையிலை பொருட்களை அதிகாரிகள் என்று கூறிய மர்ம நபர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும் கடையில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்து உள்ளனர். உடனே பரத், பணத்தை ஏன் எடுக்கிறீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், அந்த பணத்தை அபராதமாக எடுத்துக்கொள்கிறோம் என்றும் போலீஸ் நிலையத்துக்கு வந்து கணக்கு காட்டி விட்டு பெற்று செல்லுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து பரத்தை மர்ம நபர்கள் காரில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்வதாக கூறி சினிமா பாணியில் கொண்டு சென்றனர்.
2 மணி நேரத்துக்கும் மேலாக அவரை காரிலேயே வைத்து நகரை சுற்றி உள்ளனர். அவரிடம் புகையிலை பொருட்கள் விற்கும் ஏஜெண்ட் விவரத்தையும் கேட்டுள்ளனர்.
ரூ.1¾ லட்சம் பறிப்பு
இதையடுத்து சுந்தராபுரம் அருகே செல்லும் போது காரை நிறுத்தி அவரிடம் ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து உள்ளனர். பின்னர் மர்ம நபர்கள் அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்று விட்டனர். இந்தநிலையில் காரில் வந்தது அதிகாரிகளாக நடித்த ஆசாமிகள் என்பதும், ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை ஏமாற்றி பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் அந்த ஆசாமிகள் பயன்படுத்திய கார் எண், அவர்கள் அழைத்து சென்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் அதிகாரிகள் போல் நடித்து மளிகை கடைகாரரிடம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.