உப்பிலியபுரம் அருகே குழந்தை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி


உப்பிலியபுரம் அருகே குழந்தை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி
x

உப்பிலியபுரம் அருகே குழந்தை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

உப்பிலியபுரம் அருகே குழந்தை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை இல்லை

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சாரதா, இந்த தம்பதியினர் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாததால், குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர்.

இதற்காக முயற்சி எடுத்து வந்த நிலையில் கோவிந்தராஜிக்கு கோட்டப்பாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகி பாலகுமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவர் பணத்துக்கு குழந்தை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அவர் லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதன்பின் பேரம் பேசப்பட்டு ரூ.2 லட்சம் தருவதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு கோவிந்தராஜின் தாய் சுசிலா மூலம் சிறுக சிறுக ரூ.1½ லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து சுமார் ஒரு வருடத்திற்கு மேலாகியும் குழந்தையை பாலகுமார் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

கைது

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கோவிந்தராஜ் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பாலகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story