பெண்ணின் ஸ்கூட்டரில் ரூ.1¼ லட்சம் திருட்டு
புதுக்கோட்டையில் பெண்ணின் ஸ்கூட்டரில் இருந்து ரூ.1¼ லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை பிடிக்க கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் திருட்டு
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுதா (வயது 41). இவரது கணவர் செபஸ்டியான் சிங்கப்பூரில் வேலை பாார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுதா, புதுக்கோட்டை நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1½ லட்சம் எடுத்து விட்டு ஸ்கூட்டரில் கடைவீதிக்கு வந்தார். பொருட்கள் வாங்குவதற்காக ரூ.13 ஆயிரம் எடுத்து விட்டு மீதமுள்ள ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்தை ஸ்கூட்டரின் டிக்கியில் வைத்துவிட்டு வடக்கு ராஜ வீதியில் ஒரு ஜவுளிக்கடையில் வண்டியை நிறுத்தியிருந்தார்.
கடைக்கு சென்று ஜவுளி எடுத்துவிட்டு திரும்பி வந்து பார்த்த போது டிக்கியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் சுதா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கடையில் வாகனம் நிறுத்துமிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். இதில் மர்ம ஆசாமிகள் 2 பேர், ஸ்கூட்டரில் இருந்து பணத்தை திருடுவதும், அதன்பின் ஒருவர், மோட்டார் சைக்கிளில் இன்னொருவருடன் ஏறிச்செல்வதும் பதிவாகி இருந்து.
மற்றொரு மர்ம ஆசாமி சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதில் நடந்து சென்ற நபர் வேட்டி, சட்டை அணிந்துள்ளார். மற்ற 2 பேரும் பேண்ட்-சட்டை அணிந்து இருந்தனர். இவர்கள் சுதாவை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து பணத்தை திருடி சென்றிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.