காளான் வளர்க்க ரூ.1 லட்சம் மானியம்

காளான் வளர்க்க ரூ.1 லட்சம் மானியம்
அன்னூர்
கோவை அன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவை அன்னூர் வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட தோட்டக்கலைத்துறை சார்பில் சிறிய அளவிலான காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் 600 சதுர அடி பரப்பளவில் காளான் பண்ணை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த இடம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும் சாகுபடி செய்த காளான்களை புறநகர் பகுதியில் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.3000 வரை வருமானம் பெறலாம். காளான் பயிரில் அதிக ஊட்டச்சத்து உள்ளதால் அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. ஆகவே பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற அன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.