நாகர்கோவிலில்பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு
நாகர்கோவிலில் பஸ்சில் பயணி தவற விட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து கழக அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பஸ்சில் பயணி தவற விட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து கழக அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.
பஸ்சில் தவறவிட்ட பை
மதுரையில் இருந்து நேற்று ஒரு அரசு பஸ் புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் வள்ளியூர் வந்த போது பணக்குடியை சேர்ந்த ராமையா என்பவர் ஏறினார். பின்னர் பஸ் பணகுடி வந்ததும் அவர் இறங்கி விட்டார். ஆனால் அவர் தான் கொண்டு வந்த கம்பு பையை எதிர்பாராத விதமாக பஸ்சிலேயே வைத்து விட்டு இறங்கி விட்டார். அந்த பையில் 2 செல்போன்கள், 3 விலை உயர்ந்த பட்டு சேலைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது. பஸ்சானது பணகுடியில் இருந்து புறப்பட்ட பிறகு தான் அவருக்கு பையை பஸ்சில் தவறவிட்டது நினைவுக்கு வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமையா உடனே நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறினார். ஆனால் எந்த பஸ்சில் பையை தவற விட்டோம் என்று ராமையாவுக்கு தெரியவில்லை.
ஒப்படைப்பு
இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து வந்த அனைத்து பஸ்களையும் வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமையா பையை தவறவிட்ட பஸ்சானது பஸ் நிலையத்துக்குள் வந்தது. அந்த பஸ்சில் ஏறி அதிகாரிகள் சோதனை செய்வதற்கு முன்னதாகவே பஸ் கண்டக்டர் அய்யப்பன் அந்த பையை எடுத்து பத்திரமாக வைத்திருந்தார்.
பின்னர் அந்த பையை அதிகாரிகள் மீட்டு ராமையாவை தொடர்பு கொண்டு நாகர்கோவிலுக்கு வரவழைத்தனர். அவர் நாகர்கோவில் வந்த பிறகு ரூ.1 லட்சம் அடங்கிய கம்பு பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணம் மற்றும் பொருட்கள் அடங்கிய பையை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்த கண்டக்டர் அய்யப்பனையும், அவற்றை திரும்ப கொடுத்த அதிகாரிகளையும் பொதுமக்கள் பாராட்டினர்.