டிரான்ஸ்பார்மர் வெடித்த விபத்தில் சிக்கியவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
டிரான்ஸ்பார்மர் வெடித்த விபத்தில் சிக்கியவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த சவரி ஆண்டோ நிஷாந்த், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் கடந்த 2018-ம் ஆண்டில் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, எனது உடல் உறுப்புகள் நிரந்தர பாதிப்புக்கு உள்ளானது. இதனால் படிப்பு தடைபட்டது. எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வறுமையில் வாடுகிறேன். எனக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
டிரான்ஸ்பார்மர் வெடித்து ஏற்பட்ட மின்விபத்தில் மனுதாரரின் முகம் தவிர உடல் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் திருமண வாழ்க்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்படுகிறது.
இந்த தொகையை மனுதாரரின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 8 வாரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். மனுதாரர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மின்வாரியத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கான மருந்து செலவுகளையும் மின்வாரியமே ஏற்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.