வாலிபரிடம் ரூ.10¾ லட்சம் மோசடி


வாலிபரிடம் ரூ.10¾ லட்சம் மோசடி
x

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.10¾ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் கோகுல் நகரை சேர்ந்தவர் மாயாண்டி மகன் மகேஷ் (வயது 30). இவர் சமூக வலைத்தளத்தில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்தார். அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய செங்கல்பட்டை சேர்ந்த ஜனனி (33) என்பவர், செங்கல்பட்டில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் கனடாவில் உள்ள ஒரு ஓட்டலில் உதவியாளர் வேலை இருக்கிறது. அந்த வேலைக்கு அனுப்பி வைக்க ரூ.12 லட்சம் தரவேண்டும் என்று கேட்டு உள்ளார்.

இதையடுத்து மகேஷ் தரப்பில் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்து உள்ளனர். பின்னர் மகேசை டெல்லிக்கு வரவழைத்து, உமா (36) என்பவர் தலைமையில் நேர்முகத்தேர்வு நடத்தி உள்ளனர். பின்னர் மகேசின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஜனனி, உமா மற்றும் இவர்களுக்கு உடனடியாக இருந்த கேரளாவை சேர்ந்த ரெஜின் (54) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story