ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 28). இவர், மதுரை நாகனாகுளம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரிடம், கார் வாங்கித்தருமாறு கூறியுள்ளார். மேலும் ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் கூறியபடி கார் வாங்கித்தரவில்லை. தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, ரூ.3 லட்சத்தை கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து செல்லபாண்டி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபோல், காரைக்குடி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் ரூ.7 லட்சத்திற்கு லாரியை, சதீஷ் மற்றும் சேகர் ஆகியோரிடம் விற்பனை செய்துள்ளார். ஆனால், அதற்கான பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து அவர், தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தல்லாகுளம் போலீசார், சதீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேகரை தேடி வருகின்றனர்.