ரூ.100 கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு


ரூ.100 கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு
x

தர்மபுரி அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது அதிகாரிகள் ஆய்வின் போது தெரியவந்துள்ளது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி நகரில் வெளிப்பேட்டை தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு புகார் குறித்து, இந்து சமயஅறநிலையத்துறை செயல் அலுவலர் விமலா, தாசில்தார் சோதிலிங்கம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் உள்ளிட்ட அலுவலர்களுடன், திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு குறித்து திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தர்மபுரி நகர் வெளிப்பேட்டை தெரு அங்களாம்மன் கோவில் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்காக பலர் தங்களது சொத்துக்களை தானமாக வழங்கி உள்ளனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அலட்சிய போக்கால் தர்மபுரி நகரின் முக்கிய பகுதிகளான எஸ்.வி.ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில், இந்த கோவிலுக்கான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை எந்தவித சேதமும் இன்றி புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கோவில் சொத்துக்களுக்கான ஆதாரங்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்க திருத்தொண்டர் சபை சார்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் முழுமையாக செயல்படாமல் உள்ளதால் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க முடியாத நிலை உள்ளது. அரசாணை-78 ன் படி பொதுமக்கள், கோவில் சொத்துக்கள் குறித்து புகார் அளிக்க முடியும். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க புகார் அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரி அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது அதிகாரிகள் ஆய்வின் போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story