ரூ.100 கோடி மோசடி செய்தவர் கைது
கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடிக்கும்மேல் மோசடி செய்தவர் பொள்ளாச்சி கல்குவாரியில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
கோவை
கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடிக்கும்மேல் மோசடி செய்தவர் பொள்ளாச்சியில் கல்குவாரியில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ரூ.100 கோடி மோசடி
கேரள மாநிலம் திருச்சூரில் சேப் அன்ட் ஸ்டிராங் மார்க்கெட்டிங் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் பிரவீன் ராணா (வயது40). இவர் பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்தார். ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலானதும் பிரவீன் ராணா தலைமறைவாகிவிட்டார். இவர் மீது திருச்சூர் டவுன் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 22-க்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எர்ணாகுளம் அருகே உள்ள கல்லூரி சொகுசு பங்களாவில் இருந்து கடந்த 6-ந்தேதி தப்பிச்சென்ற அவரை கேரள தனிப்படை போலீசார் தேடி வந்தனர். மும்பைக்கு குடும்பத்துடன் தப்பிச்சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
பதுங்கல்
அவர் மோசடி செய்த பணத்தில் ரிசார்ட் உள்ளிட்டவற்றை வாங்கியதாகவும், வெளிமாநிலங்களில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சமீபத்தில் வெளியான சோரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் தப்புவதற்கு அந்த பட தயாரிப்பாளர் உதவியதாகவும் கூறப்பட்டது.
பொள்ளாச்சியில் கைது
இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் தொழிலாளருடன் ஒரு குடிசையில் சாமியார் தோற்றத்தில் பிரவீன் ராணா பதுங்கி இருந்துள்ளார். இந்தநிலையில் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் போனில் தொடர்பு கொண்டபோது அவர் பதுங்கி இருந்த இடம் கேரள போலீசுக்கு தெரியவந்தது.
நேற்று கேரள தனிப்படை போலீசார் பொள்ளாச்சி விரைந்து வந்து பிரவீன் ராணாவை கைது செய்து திருச்சூருக்கு கொண்டு சென்றனர்.