ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை


ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 6 July 2023 9:19 AM IST (Updated: 6 July 2023 9:57 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தன.

குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். நாளை பிற்பகல் 3 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்

பயனாளிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் நிலையில் ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story