அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி
x

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர்கள் புகார் செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் என்.எஸ் நகரைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் (வயது 30), பிரேம் குமார் (30). இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் 2 பேர் சார்பிலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த அரசு பெண் ஊழியர் ஒருவரின் தந்தை எங்களின் தந்தைக்கு அறிமுகமானார்.

அவர் தனது மகள் மூலம் கூட்டுறவு துறையில் உதவியாளர் வேலை வாங்கித்தர முடியும் என்றும், இதற்காக ரூ.6 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவித்தார். இதை உண்மை என நம்பிய எங்களின் தந்தையும் தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்தை தந்தை, மகளிடம் கடந்த ஆண்டு வழங்கினர். அப்போது ஓரிரு மாதங்களில் வேலை கிடைத்துவிடும் என்று இருவரும் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர்களை தொடர்புகொண்டு பேச முயன்றோம். ஆனால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தில் விசாரித்த போது தான் தந்தை-மகள் இருவரும் சேர்ந்து எங்களை பண மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.







Next Story