தொழில் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி
ரூ.60 லட்சத்தை திரும்ப வாங்கித் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
தொழில் அதிபர்
கோவை பொன்னையராஜபுரம் ஏ.கே.எஸ். நகரை சேர்ந்த தொழில் அதிபர் ரவி (வயது 60) செல்வபுரம் போலீஸ் நிலையத் தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாம் என்று கூறியதை நம்பி ரூ.60 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் தொழில் தொடங்காமல் ரூ.60 லட்சத்தை ஏமாற்றி விட்டார்.
இது குறித்து கடந்த 2021-ம் ஆண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தேன். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அடமானத்தில் சொத்து
இந்த நிலையில் தூத்துக்குடிக்கு சென்று கண்ணனிடம் எனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அப்போது அவரின் உறவினர் பூலோகபாண்டி என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் கண்ணனின் அம்மா பெயரில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவை அனைத்தும் அடமானத்தில் உள் ளது. அவற்றை அடமானத்தில் இருந்து மீட்க பணம் தேவைப்படு கிறது. நீங்கள் பணம் கொடுத்தால் அந்த சொத்துகளை மீட்டு விற்பனை செய்து உங்களுக்கு உரிய பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்தார்.
ரூ.13 லட்சம் மோசடி
இதையடுத்து அவரை கோவை செல்வபுரத்தில் உள்ள எனது மூத்த சகோதரர் வீட்டிற்கு வரவழைத்து 2 தவணையாக பூலோக பாண்டியின் வங்கிக்கணக்கிற்கு ரூ.13 லட்சம் செலுத்தினேன்.
அதை பெற்றுக்கொண்ட பூலோக பாண்டி, எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தரவில்லை. மேலும் நான் கொடுத்த ரூ.13 லட்சத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதன் பேரில் பூலோகபாண்டி மீது செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.