விதிமீறல் கட்டிடங்களால் ரூ.14 கோடி வருவாய் இழப்பு


விதிமீறல் கட்டிடங்களால் ரூ.14 கோடி வருவாய் இழப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

கோவை மாநகராட்சி பகுதியில் உரிய அனுமதியின்றியும், அனுமதியை மீறியும் கட்டப்பட்ட கட்டிடங்களால் ஆண்டுக்கு ரூ.14 கோடியே 38 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி பகுதியில் உரிய அனுமதியின்றியும், அனுமதியை மீறியும் கட்டப்பட்ட கட்டிடங்களால் ஆண்டுக்கு ரூ.14 கோடியே 38 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விதிமீறல் கட்டிடங்கள்

கோவை மாநகராட்சியில் மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.350 கோடி மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சியின் 5 மண்டல பகுதிகளிலும் விதிமீறல் கட்டிடங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அனுமதியில்லாமல் கட்டிடம் கட்டுவது, அல்லது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கட்டுவது, வீட்டு உபயோக பயன்பாடு என்று அனுமதி பெற்றுவிட்டு வர்த்தக ரீதியாக பயன்படுத்துவது போன்றவை உள்ளன. இதுபோன்ற கட்டிடங்களை ஒவ்வொரு வார்டு வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.14 கோடி வருவாய் இழப்பு

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கட்டிட விதிமீறல் காரணமாக ஆண்டுக்கு ரூ.14 கோடியே 38 லட்சத்து 3 ஆயிரத்து 460 வருவாய் இழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5,719 கட்டிடங்களில் கட்டிட விதிமீறல் நடந்துள்ளதும், 3,168 கட்டிடங்கள் அனுமதி பெறாததும், 3,246 கட்டிடங்கள் குடியிருப்புக்கு என்று அனுமதி பெற்று வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இதில் கோவை மேற்கு மண்டல பகுதியில் அதிக எண்ணிக்கையில் விதிமீறல் கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக வடக்கு மண்டல பகுதிகளில் உள்ளன. 5 மண்டல பகுதிகளிலும் விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வரி போடப்பட்டு மாநகராட்சிக்கு கூடுதல் வருமானம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக அந்தந்த கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசு வினியோகித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story