அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி
x

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரசு வேலை

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரும்பள்ளச்சேரி தெருவை சேர்ந்தவர் மணிராசு (வயது 48). இவரது மகன் இன்பராஜ். பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு தயார் செய்து வந்தார். மணிராசுக்கு கரூர் பசுபதி பாளையத்தை சேர்ந்த குமார் (51) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக மணிராசிடம் உறுதி கூறியதுடன் அதற்கு ரூ.15 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்தார்.

குமாரின் மருமகன் சிவா கரூரில் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வரும்நிலையில் அவரும் மணிராசிடம் அடிக்கடி வேலை வாங்கித் தர பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. குமார், சிவா மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முனியசாமி என்பவர் வீட்டிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இன்பராஜிற்கு வேலை வாங்கி தர முதலில் ரூ. 10 லட்சம் தருமாறும், பின்பு வேலைக்கான உத்தரவு வாங்கி தந்த பின்பு மீதி ரூ. 5 லட்சம் தருமாறும் மணிராசிடம் தெரிவித்ததின்பேரில் மணிராசு முனியசாமி வீட்டிற்கு வன மூர்த்தி என்பவருடன் சென்று குமாரிடம் கடந்த 29.12.2021 அன்று ரூ. 9 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணி நியமன ஆணை

இதனைத்தொடர்ந்து குமார், இன்பராஜிற்கு கூரியரில் பணி நியமன ஆணையை அனுப்பி உள்ளதாகவும், அந்தக்கவரை உடைக்காமல் ஆணையுடன் திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பெண் அதிகாரி ஒருவரை சந்திக்குமாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்பராஜ் சென்ற போது உயர் அதிகாரி இல்லாததால் இப்போது பணியில் சேர முடியாது என்றும் தகவல் தெரிவித்த பின்னர் வருமாறும் கூறி ஊருக்கு அனுப்பி விட்டனர். இதனை தொடர்ந்து குமார், இன்பராஜை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து உயர் அதிகாரிக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் உடனடியாக ஆணை பெற்று கொள்ளலாம் என்று கூறியதால் மணிராசு கடந்த பிப்ரவரி 2022-ல் குமாரிடம் ரூ.5 லட்சம் கொடுத்து அவர் தந்த பணிநியமன ஆணையை இன்பராஜ் பெற்றுள்ளார்.

மோசடி வழக்கு

ஆனால் சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விசாரித்த போது அந்த பணிநியமன ஆணை போலி என தெரியவந்தது.

இதையடுத்து மணிராசு, குமாரை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்ட போது அவர் பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி வந்ததால் மணிராசு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளிடம் புகார் கொடுத்ததுடன், மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு, ஐகோர்ட்டு உத்தரவின் பேரிலும் குமார், சிவா மற்றும் சிலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story