ஓய்வுபெற்ற என் எல் சி தொழிலாளி வீட்டில் ரூ.14 லட்சம் நகைகள் கொள்ளை


ஓய்வுபெற்ற என் எல் சி தொழிலாளி வீட்டில் ரூ.14 லட்சம் நகைகள் கொள்ளை
x

நெய்வேலி அருகே பட்டப்பகலில் ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளியின் வீட்டில் புகுந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கடலூர்

நெய்வேலி

ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளி

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட அருட்பெருஞ்ஜோதி நகர் 1 பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்(வயது 68). ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மகன் பாலமுருகன் வெளிநாட்டில் தங்கி வேலைபார்த்து வருகிறார். நீலகண்டன் தனது மருமகள் கோமதி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று காலை கோமதி இன்சூரன்ஸ் பணம் கட்டுவதற்காக நெய்வேலி டவுன்ஷிப்புக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த நீலகண்டன் வீட்டை பூட்டி விட்டு, அருகே உள்ள கடைக்கு சென்றார்.

நகைகள் கொள்ளை

பின்னர் அவர், அரை மணி நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோ வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றார். அங்கு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை காணவில்லை. நீலகண்டன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுபற்றி நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டையும், பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் கடலூரில் வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் கூப்பர் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அங்குள்ள மெயின் ரோடு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story