ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி


ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி
x

செல்போன் செயலியின் லிங்க் மூலம் ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

இணையதளம் மூலமாக ஆசைக்காட்டி பணம் பறிக்கும் சைபர் கிரைம் மோசடிகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுமார் 35 வயதுடைய வாலிபர் ரூ.18 லட்சம் ஏமாற்றப்பட்டு உள்ளார். கடந்த மாதம் 14-ந் தேதி அவரது செல்போனிற்கு இன்ஸ்டாகிராம் என்ற செயலி மூலம் லிங்க் ஒன்று வந்துள்ளது.

பின்னர் அவர் அந்த லிங்க்கை பயன்படுத்தி அதன் உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில் பகுதி நேர வேலை மட்டும் செய்தால் போதும் என்றும், பணம் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனை கண்ட அவர் அந்த லிங்க்கை பயன்படுத்தி உள்ளார்.

அப்போது அதில் கொடுக்கப்பட்ட பணியை (டாஸ்க்) குறிப்பிட்ட பணத்தை செலுத்தி செய்ததாக கூறப்படுகிறது.

அதற்கு அவருக்கு இரட்டிப்பாக பணம் கிடைத்துள்ளது. இதனால் ஆர்வம் அடைந்த அவர் ரூ.18 லட்சம் வரை பணம் செலுத்தினார். ஆனால் அவர் செலுத்திய பணம் திரும்ப வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story