மழைநீரை உறிஞ்சும் வகையில் மாத்தூரில் ரூ.2½ கோடியில் 'ஸ்பாஞ்' பூங்கா - கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வரவேற்பு


மழைநீரை உறிஞ்சும் வகையில் மாத்தூரில் ரூ.2½ கோடியில் ஸ்பாஞ் பூங்கா - கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வரவேற்பு
x

மாத்தூரில் மழைநீரை உறிஞ்சும் வகையில் ரூ.2½ கோடியில் அமைக்கப்படவுள்ள ‘ஸ்பாஞ்' பூங்காவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை

சென்னை மாநகராட்சி முழுவதும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீரை உறிஞ்சும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் 'ஸ்பாஞ்'பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம் 19-வது வார்டுக்கு உட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2-வது பிரதான சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ரூ.2.5 கோடியில் 'ஸ்பாஞ்'பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதற்கான கருத்துகேட்பு கூட்டம் நேற்று மணலி மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் திட்ட அதிகாரிகள் 'ஸ்பாஞ்'பூங்கா அமைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்து காணொலி மூலம் விளக்கி காண்பித்தனர். இதையடுத்து 'ஸ்பாஞ்'பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதில் மாநகராட்சி வடக்கு மண்டல துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மணலி மண்டல செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் மற்றும் மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story