அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.2½ கோடி: முதல்-அமைச்சர் வழங்கினார்
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.2½ கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ் மொழியின் சிறப்பை பரப்பும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவ தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
அந்தவகையில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்ப் பண்பாட்டை போற்றி பாதுகாத்துவரும் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவ அந்த பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஒப்பந்தம் செய்தது.
அதற்கு நிதியுதவி அளிக்க ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
ரூ.2½ கோடி வழங்கினார்
அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்க ஆணையிட்டது.
அதன்படி 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தொகையான ரூ.2½ கோடிக்கான காசோலையை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் வழங்கினார்.
வ.உ.சி. விருது
வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளையொட்டி அவரது பெயரில் உருவாக்கப்பட்ட புதிய விருதுக்கு முதன்முதலாக திருவாரூர் மாவட்டம் மூவாநல்லூர் வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த என்ஜினீயர் எண்ணரசு கருநேசன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 33 ஆண்டுகளாக துறைமுகம் மற்றும் சரக்கு பெட்டக தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி பெட்டக ஏற்றுமதி-இறக்குமதியை எளிதாக்கியதோடு, மும்பை, குஜராத், சென்னை துறைமுகங்களை உலக தரத்துக்கு உயர்த்தி பல சாதனைகளை செய்த எண்ணரசு கருநேசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வ.உ.சி. விருது தொகையான ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ம.சு.சண்முகம், தமிழ் வளர்ச்சி இயக்குனர் ந.அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.