பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
திருவாரூர்:
மன்னார்குடியில் இருசக்கர வாகனத்தை பதிவு செய்து கொடுக்காத நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
இருசக்கர வாகனம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்திற்குட்பட்ட செண்பகராய நல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கி வந்த இருசக்கர வாகன நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இருசக்கர வாகனத்தை ரூ.56 ஆயிரத்து 500-க்கு வாங்கி உள்ளார்.
கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் பி.எஸ்.3 ரக இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதையும், பதிவு செய்வதையும் சுப்ரீம் கோர்ட்டு தடை செய்தது.
அதற்குள் இருசக்கர வாகனத்தை பதிவு செய்து தராமல் வாகன நிறுவனம் காலதாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சிவக்குமார் வாகன நிறுவனத்திடம், தனது வாகனத்தை பதிவு செய்து தரும்படி கேட்டுள்ளார். இது பி.எஸ் 3 ரக வாகனம் என்பதால் பதிவு செய்து தர முடியாது என்று நிறுவனத்தினர் கூறினர்.
ரூ.2 லட்சம் இழப்பீடு
இதனால் மன உளைச்சல் அடைந்த சிவக்குமார் ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு கடந்த 2018-ம் ஆண்டு செம்டம்பர் 9-ந்தேதி திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நடந்து வந்தது. இதில் சம்பந்தப்பட்ட வாகன நிறுவனத்தினர் நேரில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, பழைய மாடல் வாகனத்தை சிவகுமாரிடமிருந்து பெற்று கொண்டு, அவர் அளித்த ரூ.56 ஆயிரத்து 500-ஐ, 9 சதவீத வட்டியுடன் திருப்பி தர வேண்டும் எனவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மேலும் வழக்கு செலவு தொகையான ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.