ரூ.2¾ லட்சம் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மினி லாரியுடன் பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே ரூ.2¾ லட்சம் மதிப்பிலான கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
மது பாக்கெட்டுகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட குருமன்ஸ் காலனி பகுதியில் நீண்ட நேரமாக மினி லாரி ஒன்று நிற்பதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலிசார் மூர்த்தி, உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்த மினி லாரியை சோதனை செய்தனர்.
அப்போது மினி லாரியில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் 50 பெட்டிகளில் ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
பறிமுதல்
அதைத்தொடர்ந்து மது பாக்கெட்டுகளை, மினி லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து திருப்பத்தூர் கலால் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள்களை பார்வையிட்டு வருகின்றனர்.