செல்வபுரத்தில் உலர் பழங்கள் வாங்கி வியாபாரியிடம் ரூ.22¾ லட்சம் மோசடி-போலீசார் தீவிர விசாரணை
கோவை செல்வபுரத்தில் உலர் பழங்கள் வாங்கி வியாபாரியிடம் ரூ.22¾ லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை செல்வபுரத்தில் உலர் பழங்கள் வாங்கி வியாபாரியிடம் ரூ.22¾ லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பழவியாபாரி
கோவை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் அன்சர் பாஷா (வயது 44). இவர் பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை, முந்திரி, அத்தி போன்ற உலர்பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார். அதேப்போன்று அதே பகுதியை சேர்ந்தவர் சாமி முருகன் (43). இவரும் பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார்.
அன்சர் பாஷாவிடம், சாமிமுருகன் கடனுக்கு பழங்கள் வாங்கி விற்பனை செய்வது வழக்கம். அதன்படி அவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 2021-ம் ஆண்டு மார்ச் வரை 4 மாதங்களில் 3 கட்டங்களாக ரூ.22 லட்சத்து 82 ஆயிரத்து 695-க்கு பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழங்களை வாங்கி உள்ளார். அதற்கு பணம் கொடுக்கவில்லை.
ரூ.22¾ லட்சம் மோசடி
அந்த பணத்தை 3 மாதங்களில் மொத்தமாக திருப்பி கொடுத்துவிடுவதாக சாமி முருகன் கூறி உள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் அன்சர் பாஷா, சாமி முருகனை தொடர்பு கொண்டு தனக்கு கொடுக்க வேண்டிய ரூ.22¾ லட்சம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் விரைவில் கொடுத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது.
ஆனாலும் அவர் பணத்தை கொடுக்கவில்லை. எனவே மீண்டும் அவர் சாமி முருகனை தொடர்பு கொண்டு பணம் கேட்டதற்கு அவர் ஆட்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்சர் பாஷா இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை
அந்த புகார் மனுவில், சாமி முருகன் தன்னிடம் ரூ.22 லட்சத்து 82 ஆயிரத்து 695-க்கு உலர் பழங்கள் வாங்கிவிட்டு பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டார். எனவே அந்த பணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார் சாமி முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.