ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது
பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை
பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மோசடி
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் கோவை மற்றும் சென்னையில் மார்க்கெட்டிங் நிறுவனம் தொடங்கினார். அவர், தனது நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற்றுத்தருவதாக அறிவித்ததாக தெரிகிறது. இதை நம்பி கடந்த 2016-ம் ஆண்டு பலர் பணம் செலுத்தினர்.
ஆனால் அவர், வாங்கிய பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப் பட்ட திருப்பூர் காந்தி நிலையம் பெருமாநல்லூர் சாலையை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் ராஜகோபால் (66) என்பவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
சிறையில் அடைப்பு
அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணமூர்த்தி ஆசைவார்த்தைகளை கூறி 19 பேரிடம் ரூ.2 கோடியே 97 லட்சத்து 27 ஆயிரத்து 550 பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.