விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை
மேல்மலையனூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேல்மலையனூர்,
நகை-பணம் கொள்ளை
மேல்மலையனூர் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அருகே உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் அவர் வயலில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு குடும்பத்தினருடன் அதிகாலை வீடு திரும்பினாா்.
அப்போது அவருடைய வீட்டில் இருந்து மர்மநபர்கள் சிலர் வெளியே வந்ததுடன், மோட்டார் சைக்கிளில்களில் ஏறி புறப்பட்டனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டதுடன், வீட்டுக்கு வந்து, பார்த்தபோது, அந்த மர்மநபர்கள் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதனால் பதறிய சுரேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்ற மர்மநபர்களை பிடிக்க விரட்டிச் சென்றார். ஆனால் அந்த மர்மநபர்கள் தலைமறைவாகி விட்டனர். இதுபற்றி சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுரேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வயலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, ரூ.3 லட்சம் மதி்ப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.