சாப்ட்வேர் என்ஜினீயரிடம் பகுதி நேர வேலை தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி
வாணியம்பாடியில் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் பகுதிநேர வேலை தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடியில் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் பகுதிநேர வேலை தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினீயர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் முகமது இம்ரான் (வயது 30). இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மே மாதம் 7-ந் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு சமூக வலைதளத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பகுதிநேரமாக வீட்டில் இருந்தபடியே கோடி கணக்கில் சம்பாதிக்கலாம் என தகவல் இருந்தது.
இதனை நம்பி முகமது இம்ரான் அந்த லிங்க்குள் சென்று தனது சுய விவரங்கள், வங்கி கணக்குகள் உள்பட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளார்.
அதன்பின் அவரது செல்போனுக்கு ஒரு டாஸ்க் வந்துள்ளது. அந்த டாஸ்க் ஸ்டார் மூலம் மதிப்பெண் கொடுத்தால் பணம் வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அந்த டாஸ்க்கு ஸ்டார் மதிப்பெண்களை கொடுத்துள்ளார் உடனே அவரது வங்கி கணக்குக்கு ரூ.150 பணம் வந்துள்ளது. அதன் பிறகு ரூ.9 ஆயிரம் வந்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் லிங்குகளை அனுப்பி அந்த ஓட்டல்களின் தரங்கள் குறித்து ஸ்டார் மதிப்பெண்களை அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முகமது இம்ரான் ஸ்டார் மதிப்பெண்களை கொடுத்துள்ளார்.
மோசடி
அவரது வங்கிக்கணக்கிற்கு ரூ.20 ஆயிரம் முதல் தவணையாகவும், ரூ.24 ஆயிரம் 2-வது தவணையாகவும் அடுத்தடுத்து பணம் வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு அந்த லிங்கில் இருந்த 30 பேர் அடங்கிய குழுவில் இணைந்துள்ளார்.
அப்போது அந்த குழு உறுப்பினர்களிடம் ஒருவர் வங்கி கணக்கு எண்ணை கொடுத்து அதில் பணம் செலுத்தினால் மூன்று மடங்கு பணம் கிடைக்கும்.
இதற்காக ஓட்டல்கள் தரம் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். மேலும் இந்த லிங்கை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய வேண்டாம் எனவும் ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி முகமது இம்ரான் ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் அந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் மூன்று மடங்கு பணம் வரவில்லை.
இதுகுறித்து முகமது இம்ரான் அந்த குழுவினரிடம் கேட்டதற்கு கூடுதலாக ரூ.5 லட்சம் செலுத்தினால் உடனே உங்களது வங்கி கணக்கிற்கு பணம் வரும் என தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் அந்த நபர் செல்போனை துண்டித்துள்ளார் பின்னர் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த எண்ணிற்கு முகமது இம்ரான் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனை அறிந்த முகமது இம்ரான் தனது பணத்தை மோசடி கும்பல் நூதனமான முறையில் கொள்ளையடித்து விட்டனர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.