நூதன முறையில் திருடப்பட்ட ரூ.3 லட்சத்தை மீட்டு பெண்ணிடம் ஒப்படைப்பு


நூதன முறையில் திருடப்பட்ட ரூ.3 லட்சத்தை மீட்டு பெண்ணிடம் ஒப்படைப்பு
x

நூதன முறையில் திருடப்பட்ட ரூ.3 லட்சத்தை மீட்டு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் சூரியகலா(வயது 34). இவர் தனது மகளுடன் அம்மன் சன்னதி தெருவில் வசித்து வருகிறார். இவரது கணவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகளுக்கு தபால் துறையில் உள்ள செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்துவதற்காக, ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தேடி, அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், சூரியகலாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலமாக லிங்க் அனுப்பி, அதன் மூலம் ரஸ்ட் டெஸ்க் என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார். மேலும் அதன் மூலமாக சூரியகலாவின் செல்போனை கண்காணித்து, சூரியகலா பதிவிட்ட ஆன்லைன் வங்கி பயனர் ஐ.டி. மற்றும் கடவுச் சொல்லை தெரிந்து கொண்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை திருடினார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சூரியகலா, இது குறித்து அரியலூர் இணைய குற்ற போலீசில் கடந்த 3-ந் தேதி புகார் செய்தார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி இணைய குற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் (தொழில்நுட்பம்) ஆகியோர் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்கம் செய்தனர். இதையடுத்து ரூ.3 லட்சத்தை திரும்பப்பெற்று, அதனை சூரியகலாவிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஒப்படைத்தார்.


Next Story