ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.30 லட்சம் பறிப்பு


ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.30 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 22 July 2023 1:30 AM IST (Updated: 22 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தந்தால் கமிஷன் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.30 லட்சம் பறிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தந்தால் கமிஷன் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.30 லட்சம் பறிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ரியல் எஸ்டேட் அதிபர்

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 49). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன் மதுரையை சேர்ந்த சாந்தி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி தொலைபேசி மூலம் அறிமுகம் ஆனார்.

பின்னர் சாந்தி என்பவர் பொள்ளாச்சியை சேர்ந்த அர்ஜூன் என்பவரை போன் மூலமே அறிமுகப்படுத்தினார். அப்போது அர்ஜூன் 2,000 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருவார் என்று சீனிவாசனிடம் கூறியதாக தெரிகிறது.

தொடர்ந்து அர்ஜூன் சீனிவாசனிடம் செல்போனில் பேசும்போது, விவேக் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் விவேக்கிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும், அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொடுத்தால் 15 சதவீதம் கமிஷன் தருவதாகவும் கூறியதாக தெரிகிறது.

நண்பரிடம் கடன் வாங்கினார்

இதனை நம்பிய சீனிவாசன் அவருடைய நண்பரான திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த முகமதுஅலி என்பவரிடம் தனது தொழிலுக்கு பணம் தேவை என்று கூறி கடனாக ரூ.30 லட்சத்தை வாங்கியுள்ளார். அந்த பணம் வந்தது குறித்து சீனிவாசன், விவேக்கிடம் செல்போனில் கூறியுள்ளார். அப்போது, பணத்தை எடுத்துக்கொண்டு பாலக்காடு வருமாறு விவேக் கூறினார்.

இதையடுத்து சீனிவாசன், அவருடைய நண்பர் முகமது அலி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் பாலக்காட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கு ஆட்கள் நடமாட்டம் உள்ளதாக கூறி அங்கிருந்து, கொடுவாயூரில் உள்ள ஒரு பேக்கரிக்கு வருமாறு விவேக் அழைத்துள்ளார்.

ரூ.30 லட்சம் பறிப்பு

தொடர்ந்து 3 பேரும் கொடுவாயூருக்கு சென்றனர். அங்கு விவேக்கை சந்தித்த சீனிவாசன் சிறிது நேரம் பேசினார். பின்னர் சீனிவாசன் பணத்தை எடுத்துக்கொண்டு தனது கார் டிரைவரை அங்கிருந்து காரில் அனுப்பி வைத்துவிட்டார்.

இதையடுத்து விவேக்கின் காரில் சீனிவாசன், அவருடைய நண்பர் என 3 பேர் சென்றனர். அப்போது பணத்தை ஆனைமலையில் வைத்து மாற்றிக்கொள்வதாகவும் விவேக் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கேரளாவில் இருந்து ஆனைமலைக்கு புறப்பட்டனர். திவான்சாபுதூர் அருகே வந்தபோது, சாப்பிடுவதற்காக ஒரு ஓட்டலில் காரை நிறுத்தினர். பின்னர் 3 பேரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது போன் செய்துவிட்டு வருவதாக வெளியே சென்ற விவேக், நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசன் வெளியே வந்து பார்த்தபோது விவேக்கையும், அவரது காரையும் காணவில்லை. அவர் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் தனது ரூ.30 லட்சத்தை பறித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

பணத்தை பறிகொடுத்த சீனிவாசன் நடந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் மூலம் அறிமுகமாகி, தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story