திருப்பதியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வந்த ரூ.39½ லட்சம் பறிமுதல் - வாலிபரிடம் விசாரணை
ஊத்துக்கோட்டையில் ஆம்னி பஸ்சில் கொண்டு வந்த ரூ.39½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, தேவிகா தலைமையிலான போதை தடுப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ்சில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் பயணம் செய்த திருப்பதியை சேர்ந்த விக்ரம்சிங் (வயது 32) என்பவரது பையில் ரூ.39½ லட்சம் இருந்தது. இந்த பணத்திற்கான ஆவணம் ஒன்றும் அவரிடம் இல்லை.
இது குறித்து விக்ரம் சிங்கிடம் போலீசார் விசாரித்தபோது அவர் திருப்பதி காந்தி ரோடு பகுதியில் செல்போன் உதிரிபாகம் விற்கும் கடை நடத்தி வருவதாகவும், நண்பர்களிடம் இருந்து கடன் பெற்று சென்னையில் செல்போன் உதிரிபாகம் வாங்க செல்வதாகவும் கூறினார்.
இருப்பினும் பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் ரூ.39½ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.