விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
புதுப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 52), விவசாயி. இவர் நேற்று அதிகாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக அருகில் உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் அவர் பணிகளை முடித்து விட்டு குடும்பத்துடன் மதியம் வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குமார் குடும்பத்தினர் பீரோவை பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.
இதனால் பதறிய குமார் இதுபற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.
நகை-பணம் கொள்ளை
விசாரணையில், குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வயலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை போலீசார் சேகரித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.