விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை


விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை
x

பெண்ணாடம் அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற தலைவியின் மகளிடமும் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பெண்ணாடம்,

மின்தடை

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த காரையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 70). இவருடைய மனைவி வளர்மதி. இவர்களுடைய மகன்கள் செல்வகணபதி(45) கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும், சவுந்தரராஜன்(40) பெரம்பலூரில் போலீசாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு அன்பழகன், வளர்மதி, அன்பழகனின் தாய் தையல்நாயகி ஆகியோர் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கினர். அப்போது அவர்களுடன், வீட்டின் அருகில் இருந்த உறவினரான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மலர்க்கொடி மகள் கலையரசி (42) என்பவரும் தங்கியுள்ளார்.

நகை பறிப்பு

இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் கலையரசியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கசங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த கலையரசி, திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த நபர், கலையரசியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அன்பழகன் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன் துணிமணிகளும் சிதறிக்கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 13 பவுன் நகைகளையும், ஆயிரம் ரூபாயையும் காணவில்லை. அதனை அந்த மர்மநபர் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் அன்பழகன் குடும்பத்தினர் மற்றும் கலையரசியிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து கலையரசி கொடுத்த அடையாளங்களை கொண்டு பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story