தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு


தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு போனது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனியில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 66). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றார்.

அதை அறிந்த மர்ம ஆசாமிகள், இரவு நேரத்தில் அண்ணாமலை வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்களை திருடிவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய அண்ணாமலை, தனது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. அதில் இருந்த 3 செயின், 2 வளையல், ஒரு மோதிரம், 3 வைரமோதிரம், விலை உயர்ந்த கை கடிகாரம், 3 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அண்ணாமலை பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அங்கு பதிவாகி இருந்த கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவான மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story