சேலத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடன் உதவி-சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் வழங்கினார்


சேலத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடன் உதவி-சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் வழங்கினார்
x

சேலத்தில் 4 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடன் உதவியை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் வழங்கினார்.

சேலம்

சேலம்:

சேலத்தில் 4 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடன் உதவியை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் வழங்கினார்.

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் டாம்கோ கடன் திட்டங்கள் தொடர்பாக அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்கவும், அனைத்து உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு (ஆண், பெண்) விலையில்லா சைக்கிள்கள் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் அதிக நன்கொடைகளை திரட்டவும், துரிதமாக நல திட்ட உதவிகளை வழங்கிடவும், மகளிர் திட்டம் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

தேவாலயம் புனரமைத்தல்

மேலும், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் முழுவதும் எந்த ஒரு சிறுபான்மையின குழந்தையும் விடுபடாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேவாலயங்களை புனரமைத்தல் பணிக்காக அரசு ஒதுக்கீடு நிதி அதிகமாக இருந்தும் பயன்பெறுபவர்கள் மிக குறைவாக உள்ளனர். எனவே கிறிஸ்தவ மத தலைவர்களை ஒன்றிணைத்து அதிக பயனாளிகள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து தையல் எந்திரங்களை வழங்க வேண்டும். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் கல்விக்கடன் வழங்க வங்கிகள் முன்வரவேண்டும். குறிப்பாக, வட்டார அளவில் ஒரு வங்கிக்கு 2 பயனாளிகளுக்காவது கல்விக்கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடன் உதவி

தொடர்ந்து டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் 4 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.39 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவியையும், உலமா மற்றும் பணியாளர் நல வாரியத்தின் கீழ் மகப்பேறு உதவித்தொகை, புதிய உறுப்பினருக்கு அடையாள அட்டையையும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் ரவிகுமார், முன்னோடி வங்கி மேலாளர் (இந்தியன் வங்கி) இளவரசு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story
  • chat