6,131 பேரிடம் ரூ.410 கோடி மோசடி புகார்: பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது


6,131 பேரிடம் ரூ.410 கோடி மோசடி புகார்: பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது
x

6,131 பேரிடம் ரூ.410 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில் பஸ் நிறுவன அதிபரின் மனைவி மற்றும் மகனை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை (பஸ் நிறுவனம்) நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார்.

இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர். கடந்த 2020-ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு கமாலுதீன் இறந்த பிறகு அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி ஆகியோரிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

6,131 பேரிடம் ரூ.410 கோடி மோசடி

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். போலீசார் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் சுமார் 6,131 பேரிடம் ரூ.410 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

தொடர்ந்து, திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார், கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் 4 பேர் மற்றும் கமாலுதீனின் சகோதரர் அப்துல்கனி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர்.

தாய்-மகன் கைது

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கமாலுதீன் மனைவி ரஹானாபேகம்(வயது 48), மகன் அப்சல் ரகுமான்(25) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.


Next Story