திருச்சி விமான நிலையத்தில் ரூ.44.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.44.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் பயணிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.44.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் பயணிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
பறிமுதல்
இதனையடுத்து அவரை சோதனை நடத்தியதில் 811 கிராம் தங்கத்தை உருளை வடிவமாக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.44.17 லட்சம் ஆகும். மேலும் விசாரணையில் அந்த பெண் சென்னையை சேர்ந்த பார்வதி பன்னீர்செல்வம் என தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.