ஒச்சாண்டம்மன் கோவிலில் கொள்ளையடித்த ரூ.5 லட்சம்-நகைகள் தோட்டத்தில் பதுக்கல்-2 பேர் கைது


உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோவிலில் கொள்ளையடித்த ரூ.5 லட்சம்-நகைகளை தோட்டத்தில் பதுக்கி வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோவிலில் கொள்ளையடித்த ரூ.5 லட்சம்-நகைகளை தோட்டத்தில் பதுக்கி வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவிலில் கொள்ளை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவிலின் கருவறை முன்பு இருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். மேலும் உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

அப்போது பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட பாப்பாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன்(வயது 41), தங்கராஜ் (51) ஆகியோரை கைது செய்தனர்.

பறிமுதல்

மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் கைது செய்தால் தான் மொத்தம் எவ்வளவு பணம் திருட்டு போய் இருக்கும் என்ற விவரம் முழுமையாக தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story