பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.50 லட்சம் மோசடி
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த கணவர், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த கணவர், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலை வாங்கி தருவதாக
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் தன்யா (வயது 39). இவருடைய கணவர் கருணாநிதி (45). தன்யா கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுவதாக கூறி வந்தார். இவர் தன்னிடம் அறிமுகமான நபர்களிடம், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நர்சு, மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. பணம் தந்தால் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறினார்.
இதை நம்பி சூலூரை சேர்ந்த முருகன் (25) என்பவர் டிரைவர் வேலைக்காக பல லட்ச ரூபாய் பணம் கொடுத்தார். இதையடுத்து அவருக்கு போலியான நியமன ஆணை வழங்கியதாக தெரிகிறது. இதை வைத்து வேலையில் சேர முயன்றபோது அது போலி என தெரியவந்தது. இதுகுறித்து முருகன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், பணம் கொடுத்து ஏமாந்த சிலர் தன்யாவிடம் தங்களது பணத்தையும், சான்றிதழ்களையும் திரும்ப கேட்டு வந்தனர்.
வீடு முற்றுகை
இதற்கிடையே தன்யாவும், அவர் கணவருடன் வீட்டை காலி செய்து சரவணம்பட்டிக்கு சென்று விட்டனர். அங்கே அவரது வசிப்பிடம் கண்டறிந்த பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கே சரவணம்பட்டி போலீசார் விசாரணைக்கு சென்றனர். அப்போது தன்யா, தற்கொலை செய்ய போகிறேன் என வீட்டில் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு மிரட்டல் விடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் எதுவும் செய்யாமல் விட்டு விட்டனர்.
இந்த நிலையில் நேற்று சூலூரை சேர்ந்த நவுபல் (23), மற்றும் சரவணக்குமார், நந்தகுமார், சுரேந்திரன், தேவராஜ், விக்னேஷ், அகிலன், கோகுல், ரஞ்சிதா ஆகியோர் தன்யா மற்றும் அவரது கணவர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் மோசடி புகார் அளித்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி விசாரித்தார்.
ரூ.50 லட்சம் மோசடி
விசாரணையில், இவர்களிடம் வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.50 லட்சம் வரை தன்யா மற்றும் அவரது கணவர் மோசடி செய்திருப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் மோசடி, ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில், போலீசார் தேடுவதை அறிந்த கணவன், மனைவி 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.