சுங்குவார்சத்திரம் அருகே கடை பூட்டை உடைத்து ரூ.53 லட்சம் செல்போன்கள் திருட்டு


சுங்குவார்சத்திரம் அருகே கடை பூட்டை உடைத்து ரூ.53 லட்சம் செல்போன்கள் திருட்டு
x

சுங்குவார்சத்திரம் அருகே கடை பூட்டை உடைத்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையர்கள் சாக்குமூட்டையில் அள்ளி சென்றனர்.

காஞ்சிபுரம்

கடை பூட்டை உடைத்து...

சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான். இவர் சுங்குவார் சத்திரம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை ரகுமான் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த உயர்ரக செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ரூ.53 லட்சம் செல்போன்கள் திருட்டு

இது குறித்து ரகுமான் சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடையங்களை சேகரித்தனர்.

மேலும் அந்த கடை வெளியே இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சரக்கு ஆட்டோவில் வந்த 3 மர்ம நர்பகள் ஆள்நடமாட்டம் இல்லாத போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதும், அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையில் அங்கிருந்த செல்போன்களை ஒட்டுமொத்தமாக அள்ளி சென்றதும் பதிவாகி இருந்தது.

இதில் 350 செல்போன்கள் திருடு போனது. அவற்றின் மதிப்பு ரூ.53 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story