கார் உரிமையாளருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
கார் உரிமையாளருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
காரைக்குடி அருணா நகரை சேர்ந்தவர் செந்தில் முருகப்பன். இவர் கடந்த 2015-ம் ஆண்டில் மதுரையில் உள்ள தனியார் கார் ஷோரூமில் சொகுசு கார் ஒன்றை 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார். வாங்கிய 10 நாட்களிலேயே காரில் பழுது ஏற்பட்டதாம். இதைத்தொடர்ந்து அவர் அந்த கார் விற்பனை செய்த ஷோரூமுக்கு சென்று பழுதை நீக்கி தருமாறு கூறினாராம். அதன்பேரில் காரை சரி செய்து கொடுத்தார்களாம். ஆனால் மீண்டும் சில நாட்கள் கழித்து காரில் அதே பழுது ஏற்பட்டதாம். அதை சரி செய்து தரும்படி பலமுறை முறையிட்டும், அதை சரி செய்து கொடுக்கவில்லையாம். பல லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கிய கார் பயணத்துக்கு உதவாமல் இருந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிவகங்கையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுவன சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.16 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் கோர்ட்டு தலைவர் பாலசுப்பிரமணியன், உறுப்பினர்கள் குட்வின் சாலமோன் ராஜ், நமச்சிவாயம் ஆகியோர், கார் நிறுவனமும், விற்பனை ஷோரூம் நிறுவனத்தினரும் இணைந்து அல்லது தனித்தனியாகவோ ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சத்தை உரிய வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.