பொக்லைன் எந்திரத்தை எடுத்து சென்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
பொக்லைன் எந்திரத்தை எடுத்து சென்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கி கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பொன்லைன் எந்திரம் ஏலம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த டிரான்ஸ்போர்ட் நிறுவனம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொக்லைன் எந்திரம் ஒன்று ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை திண்டுக்கல் அகரத்தை சேர்ந்த பழனிச்சாமி மனைவி சீனியம்மாள் ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளார். மேலும் ஏலம் எடுத்த உடனே ரூ.71 ஆயிரம் செலுத்திய சீனியம்மாளுக்கு, மீதமுள்ள ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அந்த நிறுவனத்திலேயே கடன் வசதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஆர்.சி. புத்தகத்தில் ஒரு மாதத்திற்குள் பெயரை மாற்றி தருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் பெயரை மாற்றி தரவில்லை என தெரிகிறது.
நோட்டீஸ்
இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நிறுவனம் சார்பில் சீனியம்மாளுக்கு ரூ.56 ஆயிரத்து 985 பாக்கி தொகை செலுத்த கூறி நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனையடுத்து சீனியம்மாள் தான் நிறுவனத்திற்கு இதுவரை செலுத்திய விவர அறிக்கையை கேட்டு பெற்றார். அப்போது, அதில் அவர் செலுத்திய ரூ.34 ஆயிரத்து 504 கணக்கில் இருந்து விடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சீனியம்மாளுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் அந்த நிறுவனம் கடந்த 2012 ஜூலை மாதம் பொக்லைன் எந்திரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சீனியம்மாள் ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு வரை அங்கு விசாரிக்கப்பட்டது.
ரூ.7 லட்சம் இழப்பீடு
பின்னர் இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன் நேற்று வழங்கினார்.
இதில், சீனியம்மாள் செலுத்திய ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 934-க்கு கடந்த 2012 மே மாதம் முதல் 12 சதவீத வட்டியும், மேலும் ரூ.7 லட்சம் இழப்பீட்டை கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து தனியார் நிறுவனம் தீர்ப்பு வழங்கிய 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.