சரக்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


சரக்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

சத்தியமங்கலம் அருகே சரக்கு வேனில் வெங்காய மூட்டைக்குள் பதுக்கி வைத்து கடத்தப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கர்நாடக மாநில வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே சரக்கு வேனில் வெங்காய மூட்டைக்குள் பதுக்கி வைத்து கடத்தப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கர்நாடக மாநில வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

வாகன சோதனை

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் போலீஸ் துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களையும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வரும் வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்வர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் (பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர் ஆர்.பழனிச்சாமி மற்றும் போலீசார் பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.

வெங்காய மூட்டைக்குள்...

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேனில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டையில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு செல்வதாக கூறினர். மேலும் வேனில் வந்தவர்களின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு வேனில் இருந்த வெங்காய மூட்டைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது வெங்காய மூட்டைக்குள் 79 சாக்கு மூட்டைகள் மற்றும் 4 அட்டை பெட்டிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டனர். 1,281 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு வேனில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், 'அவர்கள் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த சரக்கு வேன் டிரைவரான மகேந்திரன் (வயது 32) மற்றும் பிரமோத் (27) என்பதும், அவர்கள் வெங்காய மூட்டைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகளை பதுக்கி வைத்து கடத்தி வந்ததும்,' தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story