பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி; பால் வியாபாரி கைது


பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி;   பால் வியாபாரி கைது
x

வேறொருவர் நிலத்தை தனது நிலம் என கூறி, விதவை பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த பால் வியாபாரியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

வேறொருவர் நிலத்தை தனது நிலம் என கூறி, விதவை பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த பால் வியாபாரியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பால் வியாபாரி

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த தேவசகாயம் மனைவி மேரி (வயது 65). இவர் நாகர்கோவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில், எனது கணவர் தேவசகாயம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நான் எனது மகனுடன் வசித்து வருகிறேன். இந்தநிலையில் ஆசாரிபள்ளம் மேலபெருவிளையை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் (39) என்பவர் எனது வீட்டிற்கு பால் வினியோகம் செய்ய வருவதுண்டு. அந்த பழக்கத்தில் ஆரோக்கிய ராஜ் என்னிடமும், எனது மகனிடமும் எனக்கு சொந்தமான நிலம் ஒன்று இருப்பதாக கூறி, அதனை தங்களிடம் குறைந்த விலைக்கு விற்க போவதாக கூறினார். அதனை நம்பி நான் ரூ.8½ லட்சத்தை ஆரோக்கிய ராஜ் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோரிடம் கொடுத்தேன்.

பண மோசடி-கைது

பின்னர் அந்த நிலம் வேறு ஒருவரது நிலம் என்பது தெரியவந்தது. மற்றொருவா் நிலத்தை தனது (ஆரோக்கிய ராஜ்) நிலம் என கூறி என்னிடம் பண மோசடி செய்தது தொியவந்தது. இதனால் பணத்தை திருப்பி தரும்படி கணவன், மனைவியிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த கோர்ட்டு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதைதொடா்ந்து ஆரோக்கிய ராஜ் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆசாரிபள்ளம் பகுதியில் ஆரோக்கிய ராஜை போலீசார் கைது செய்தனர்.


Next Story