மானிய விலையில் பொருட்கள் வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; தோட்டக்கலை உதவி அலுவலர் கைது
சேரன்மாதேவியில் மானிய விலையில் பொருட்கள் வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக தோட்டக்கலை உதவி அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
சேரன்மாதேவி:
அம்பை அருகே உள்ள அடைச்சாணி தெற்கு தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 37). இவர் சேரன்மாதேவியில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் மானிய விலையில் டிராக்டர், வீடு, தையல் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுள்ளார். பொதுமக்களிடம் பணத்தை வாங்கி விட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபரான சேரன்மாதேவி ராமசாமி கோவில் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சுப்புலட்சுமி என்பவர் சேரன்மாதேவி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பொதுமக்களிடம் ரூபாய் 8.5 லட்சம் மோசடியாக பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.