பஸ்சின் நிறத்தில் டிரைவர், கண்டக்டருக்கு சீருடை
பஸ்சின் நிறத்தில் டிரைவர், கண்டக்டருக்கு சீருடை
நாகர்கோவில்:
பஸ்சின் நிறத்தில் டிரைவர், கண்டக்டருக்கு சீருடையை கேரள அரசு போக்குவரத்துக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
அதி விரைவு பஸ்
கேரள அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து தொலைதூர பஸ் சேவைகளையும் ஒன்றிணைக்கும் வகையில் கடந்த ஆண்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி.- ஸ்விப்ட் நிறுவனத்தின் கீழ் தொடங்கப்பட்ட புதிய பஸ் போக்குவரத்து சேவையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அந்த நிறுவனத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட ஸ்விப்ட் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது அந்த ஸ்விப்ட் பஸ்கள் அனைத்தும் அதிவிரைவு பஸ்களாக வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரிபாட்டில் இருந்து கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஆத்தங்கரை பள்ளிவாசல் வரை கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய ஸ்விப்ட் அதிவிரைவு பஸ் போக்குவரத்தை சமீபத்தில் தொடங்கி உள்ளது.
பஸ் நிறத்தில் சீருடை
இந்த பஸ்சின் நிறம் மற்ற பஸ்போன்று இல்லாது சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. அந்த பஸ்சின் நிறத்திற்கு ஏற்ப டிரைவர் மற்றும் கண்டக்டரின் சீருடைகளும் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது.
இந்த அதிவிரைவு பஸ் அரிப்பாட்டில் இருந்து தினமும் அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு, கொல்லம், திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை, களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில், அஞ்சுகிராமம், கூடங்குளம் வழியாக ஆத்தங்கரை பள்ளிவாசலை மதியம் 1.10 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக அரிப்பாட் பகுதியை இரவு 10.10 மணிக்கு அடைகிறது. இந்த பஸ் சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.