இலவச பஸ் சேவையால் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு - திட்டக்குழு ஆய்வில் தகவல்


இலவச பஸ் சேவையால் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு - திட்டக்குழு ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2022 11:22 AM IST (Updated: 27 Nov 2022 11:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண சேவை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண சேவை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து மாநில திட்டக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விவசாய பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம், தொழில்வள பகுதியான திருப்பூர் மாவட்டம், வர்த்தக பகுதியான மதுரை மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் 40 வயதை கடந்தவர்கள் ஆவர். பயணத்துக்காக குடும்ப உறுப்பினர்களை சார்ந்திருக்கும் நிலையில் மாற்றம் வந்திருக்கிறதா? அதிகாரம் அளிப்பது மற்றும் கண்ணியம் போன்ற அம்சங்களில் இலவச பஸ் பயண திட்டம் ஏதேனும் பங்களிப்பு செய்கிறதா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு பதில் அளித்த பெண்கள் மாத சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு மிச்சம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மாதம் தோறும் சராசரியாக ரூ.888 என்ற அளவில் சேமிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இலவச பஸ் பயண திட்டத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் பண ரீதியில் சேமிப்பு கிடைத்தாலும், பஸ்களை இயக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்ற கருத்தும் ஆய்வின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ்கள் அடிக்கடி இயக்கப்பட வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்களின் அடிப்படையில் இலவச பஸ் பயண திட்டத்தை தமிழக அரசு மேம்படுத்த உள்ளது.


Next Story