திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் தங்கம்

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆதம் மாலிக் (வயது 54) என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது, சாக்லேட் டப்பாவில் தங்கத்தை சிறு சிறு கட்டிகளாக செய்து மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்து 149 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 8 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

*மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள மருங்காபுரியை சேர்ந்தவர் சுகன்யா (27). இவர் வீட்டை பூட்டி விட்டு, நத்தத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது சுமார் ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகளும், 10 ஆயிரம் ரொக்க பணமும் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் புத்தானத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்-மடிக்கணினி திருடியவர் கைது

*துவாக்குடி வடக்கு மலை சொசைட்டி தெருவை சேர்ந்த சாந்தகுமார் (23) என்பவரை திருவெறும்பூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் திருச்சி கூனி பஜாரை சேர்ந்த ஜான் லூயிஸ் மகன் கிஷோர் (23) மற்றும் கொழுப்பு என்ற பாரதி ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள், மடிக்கணினி, ஸ்மார்ட் வாட்சு உள்ளிட்டவைகளை திருடியது தெரியவந்தது. இதில் கிஷோர் மற்றும் பாரதி ஆகியோர் திருச்சியில் நடந்த ஒரு அடிதடிவழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதைத்தொடர்ந்து சாந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.

கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல்

*லால்குடி அருகே டி.கல்விக்குடி கிராமநிர்வாக அதிகாரி சரவணன் (48). இவர், நத்தமாங்குடி வருவாய் கிராம பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவரை மாங்குடி கிராமத்தை சேர்ந்த எழில்நிலவன் (33) என்பவர் தாக்கி உள்ளார். இதை தடுத்த கிராம உதவியாளர் கோகிலாவையும் தாக்கினாராம். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவரை தாக்கிய 3 பேர் கைது

*மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் (60). இவருக்கும், இவரது சகோதரர் கண்ணன் என்பவர் மகன்களான அஜித்குமார் (27), மோகன் (30), ஆகியோருக்கும் இடையே ,முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் அஜித்குமார், மோகன் மற்றும் ராஜவேலு மகன் கிஷோர் (22) ஆகியோர் சேர்ந்து சண்முகத்தை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமார், மோகன், கிஷோர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story