குன்றத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.93 லட்சம் கைக்கடிகாரங்கள் திருட்டு


குன்றத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.93 லட்சம் கைக்கடிகாரங்கள் திருட்டு
x
தினத்தந்தி 9 Dec 2022 10:12 AM GMT (Updated: 9 Dec 2022 10:15 AM GMT)

குன்றத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டின் மேஜையில் வைத்திருந்த ரூ.93 லட்சம் மதிப்புள்ள 5 கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு மடிக்கணினி, செல்போன் ஆகியவை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காஞ்சிபுரம்

குன்றத்தூரை அடுத்த கோவூர் அருகே உள்ள தண்டலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 44). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு அதன் ஒரு சாவியை காவலாளியிடம் கொடுத்துவிட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் மேஜையில் வைத்திருந்த ரூ.93 லட்சம் மதிப்புள்ள 5 கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு மடிக்கணினி, செல்போன் ஆகியவை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் குன்றத்தூர் போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சோழிங்கநல்லூரை சேர்ந்த ராபர்ட்வோர்டு (26) என்பரை கைது செய்தனர். ஆங்கிலோ இந்தியரான இவர், ஆன்லைன் மூலம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தபோது(பைக் டாக்சி) ராஜேஷின் வீடு பூட்டி இருப்பதை கண்டார். ஜன்னல் அருகே வீட்டின் மற்றொரு சாவி இருப்பதை பார்த்த அவர், கதவை திறந்து உள்ளே சென்று திருடியதும் தெரிந்தது. திருடப்பட்ட கைக்கடிகாரங்களின் மதிப்பு தெரியாததால் அவற்றை விற்காமல் வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story