மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை திட்டம்:வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி இன்று தொடக்கம்இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் பேட்டி


மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை திட்டம்:வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி இன்று தொடக்கம்இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 9:35 AM GMT)

மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை திட்டத்தில் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று கலெக்டர் கூறினார்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் அருண்தம்புராஜ் நேற்று அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 கட்டமாக...

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த இருக்கிறோம். மாவட்டத்தில் மொத்தம் 1,416 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் நடக்கிறது. முதல் விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட பதிவு அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

இந்த 1,416 ரேஷன் கடைகளையும் நாங்கள் 2 ஆக பிரித்து உள்ளோம். முதல் கட்டம் 24-ந்தேதி தொடங்கும் போது, அனைத்து நகர பகுதிகள், அதாவது மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் நடக்கும். 50 சதவீத ஊரக பகுதி கடைகளிலும் பதிவு நடக்கிறது. 16 ஒன்றியங்களிலும் 2 கட்டமாக நடக்கிறது.

இன்று டோக்கன் வினியோகம்

முதல் கட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்குகிறது. இந்த பணியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபடுவார்கள். எந்த நாளில் விண்ணப்ப பதிவு முகாமுக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்படும். ரேஷன் கடைகளில் விண்ணப்பம், டோக்கன் எதுவும் தர மாட்டார்கள். டோக்கன் கொடுக்கும் போதே, வீட்டு உரிமையாளர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொள்வார்கள். குறித்த தேதியில் மட்டுமே முகாமுக்கு செல்ல வேண்டும்.

ஒரு ரேஷன் கடைக்கு ஒரு இடத்தில் மட்டும் முகாம் நடத்த இருக்கிறோம். அந்த பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்வார்கள். அவர்களிடம் விண்ணப்பங்கள் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். கூட்டம் கூட வேண்டாம். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும். 500 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள இடத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பதிவு செய்யப்படும்.

நடமாடும் குழு

2-ம் கட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி முதல் தான் டோக்கன் வினியோகம் செய்யப்படும். மகளிர் உரிமம் தொகை கொடுக்க அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்ய்பட்டு வருகிறது. பதிவு செய்யும் அலுவலர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க மாவட்ட, மண்டல, வட்டார அளவிலான குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது. நடமாடும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

7.8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு, வீடாக டோக்கன் வழங்குகிறோம். தகுதி அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது மக்களுக்கான திட்டம். ஆகவே எந்த தனி மனிதரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். விண்ணப்பதாரரே நேரிடையாகசென்றால் போதும். மாற்றுத்திறனாளிகள், முகாமுக்கு வர முடியாதவர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று அலுவலர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் டாக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.


Next Story